வெளிநாடுகளில் போதைப்பொருள் வழக்குகளில் 1,588 மலேசியர்கள் கைது

29 அக்டோபர் 2026, 9:40 AM
வெளிநாடுகளில் போதைப்பொருள் வழக்குகளில் 1,588 மலேசியர்கள் கைது

ஷா ஆலாம், அக்.29: வெளிநாடுகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் மலேசியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில், வெளிநாடுகளில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 1,588 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,303 -ஆகப் பதிவான நிலையில், இவ்வாண்டு மேலும் 285 பேர் அதிகரித்துள்ளனர்.

அதேவேளை, 2024ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை 1,181ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை வெளியுறவுத் துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார். இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள மலேசியர்களின் மொத்த எண்ணிக்கை 3,322 எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் மலேசியர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா 381 பேருடன் முதலிடத்தில் உள்ளது. சீனாவில் 380, சிங்கப்பூரில் 310, தாய்லாந்தில் 102, ஜப்பானில் 72 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் நடைபெற்ற வாய்மொழி கேள்வி நேரத்தின்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை குறித்து ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டோரிஸ் சோபியா புரோடி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.

கைது செய்யப்படும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட லுகானிஸ்மான், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் உத்திகளும் தற்போது நவீனமடைந்து, சிக்கலானதாக மாறி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பல நாடுகள் போதைப்பொருள் குற்றங்களைத் தடுப்பதற்கான தங்களது சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, நாட்டின் சட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர் இவ்விவகாரத்தில் மேலும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் இருப்பதையும் மலேசியா ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், நாட்டின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், உள்துறை அமைச்சின் (KDN) கீழ் செயல்படும் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அமைப்புகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.