கோலாலம்பூர், நவ.14: மலேசியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 96,844 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தேசிய காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வுத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டில் 33,136 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 36,740-ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மட்டும் 26,968 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் உட்பட நாட்டின் சட்டங்களை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் அரச மலேசியக் காவல்துறை (PDRM) ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் காலிட் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
ஒருவரின் அந்தஸ்து, பதவி, சமூக நிலை அல்லது குடியுரிமை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நாட்டில் வசிக்கும் அனைவரும் மலேசியச் சட்டங்களுக்கு உட்பட்டவர்களே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, கடந்த புதன்கிழமை கோலாலம்பூர், கெப்போங், டேசா அமான்பூரியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் காவல்துறை உறுப்பினர் ஒருவரின் வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.







