பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க DBKL-க்கு கோரிக்கை

16 நவம்பர் 2026, 9:31 AM
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க DBKL-க்கு கோரிக்கை

கோலாலம்பூர், நவ.16: கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பிரதமர் துறை (கூட்டரசுப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் துறை (கூட்டரசுப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயப் பகுதிகளின் எண்ணிக்கையை 2022-ஆம் ஆண்டில் 31-ஆக இருந்த நிலையிலிருந்து, இவ்வாண்டு 14 -ஆகக் குறைப்பதில் DBKL முன்னெடுத்த தடுப்பு நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை 10 -ஆகக் குறைப்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோலாலம்பூரின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் செயல்படும் DBKL கிளை அலுவலகங்கள், மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் நிலவரம் குறித்த நிகழ்நேரத் தகவல்களை மாநகர் மேயருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டரசுப் பிரதேச மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.

இதற்கிடையில், எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்வதற்காக அரசு அமைப்புகளைச் சேர்ந்த 4,162 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அடுத்த ஆண்டில் திடீர் வெள்ள அபாயப் பகுதிகளின் எண்ணிக்கையை 10 அல்லது அதற்கும் குறைவாகக் கொண்டுவரும் நோக்கில் DBKL மொத்தம் 27 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக கோலாலம்பூர் மேயர் டத்தோ ஃபட்லுன் மாக் உஜுட் தெரிவித்தார்.

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வடிகால் அமைப்புகள், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கக் குளங்களின் பராமரிப்புப் பணிகள் தற்போது ஆண்டுக்கு இரண்டு முறை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவை காலாண்டுக்கு ஒருமுறை என அதிகரிக்கப்பட்டுள்ளன.

வெள்ளநீர் பெருக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரின் கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இதற்கிடையில், வானிலை நிலவரங்களைக் கண்காணிப்பதற்காக DBKL தனி செயல்பாட்டு அறையையும் செயல்படுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.