பெட்ரோல் மானியத்திற்கு ஆண்டுக்கு RM40 பில்லியன் செலவிடுகிறது அரசு: பிரதமர்

6 நவம்பர் 2026, 1:56 AM
பெட்ரோல் மானியத்திற்கு ஆண்டுக்கு RM40 பில்லியன் செலவிடுகிறது அரசு: பிரதமர்

மலாக்கா, நவ 6: மலேசியாவில் பெட்ரோல் விலையை குறைந்த அளவில் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காக, அரசு ஆண்டுதோறும் குறைந்தது 40 பில்லியன் ரிங்கிட்டை எரிபொருள் மானியத்திற்காக ஒதுக்குவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தற்போது மலேசியாவில் வழங்கப்படும் பெட்ரோல் விலை, உலகின் இதர எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மானிய விலையில் ரோன் 95 பெட்ரோல் ஒரு லிட்டர் 1.99 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விலையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காக அரசு ஆண்டுதோறும் சுமார் 40 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

புருணை நாட்டில் மட்டுமே மலேசியாவைவிட பெட்ரோல் விலை சற்றுக் குறைவாகக் காணப்படுவதாகவும், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில்கூட பெட்ரோல் விலை மலேசியாவைவிட அதிகமாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மலாக்கா, டேவான் சேக்கோலா திங்கி பாய் ஃபோங் மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்ற 'மலாம் ஹராப்பான்' (Malam Harapan) நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவருமான அன்வார், அரசாங்கம் எரிபொருள் மானியத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கான முக்கிய காரணம், நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்த மக்களின் நம்பிக்கைக்குப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற கடப்பாடே எனக் குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்தகால அரசு நிர்வாகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல்களின் விளைவாக உருவான கடன் சுமையை தற்போதைய அரசாங்கம் சுமக்க வேண்டியுள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

இதற்கான உதாரணங்களாக 1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB), பெடரல் லேண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (FELDA) மற்றும் லெம்பாகா தாபுங் ஹாஜி ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

1MDB விவகாரத்தில் ஏற்பட்ட கடன் சுமையை யார் செலுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிய அவர், அந்தச் சுமை மலாய், சீனர், இந்தியர் என அனைத்து இன மக்களையும், சபா மற்றும் சரவாக் மாநில மக்களையும் பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, மலாய் மக்களுடன் தொடர்புடைய ஃபெல்டா நிறுவனத்தின் கடன் சுமையையும் அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாகக் கூறிய அவர், இதற்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ ஒரு பில்லியன் ரிங்கிட் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் நிதித் திருட்டு மற்றும் முறைகேடுகளே இத்தகைய நிலைமைக்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தாபுங் ஹாஜி நிதியில் 10 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அன்வார் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேவேளையில், முன்கூட்டிய வாக்களிப்பு நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.