நஜிப்புக்கான RM50 மில்லியன் அபராதத்தை அம்னோ செலுத்தியதை ஏற்க முடியாது: அன்வார்

6 நவம்பர் 2026, 9:19 AM
நஜிப்புக்கான RM50 மில்லியன் அபராதத்தை அம்னோ செலுத்தியதை ஏற்க முடியாது: அன்வார்

கோலாலம்பூர், நவ.6 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட RM50 மில்லியன் அபராதத்தை அம்னோ செலுத்தியுள்ள நடவடிக்கைக்கு தாம் உடன்படவில்லை எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நஜிப்புடன் தமக்கு நல்லுறவும் நட்பும் இருந்தாலும், அந்த உறவின் அடிப்படையில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றங்களைப் புறக்கணிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.

அம்பாங், மஸ்ஜிட் தாமான் கோசாஸில் வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஊழல் நடவடிக்கைகளைச் சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்றார்.

குறிப்பாக, எதிர்காலத் தலைமுறையினருக்கு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை உறுதியாக நிராகரிக்கும் ஒழுக்கநெறியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், நஜிப்பிற்கான அபராதத்தைச் செலுத்துவது தொடர்பான அம்னோவின் முடிவு அக்கட்சியின் சொந்த உரிமைக்கு உட்பட்டது என்றும், சட்ட நடைமுறைகளையும் மாமன்னர் வழங்கிய அரசியலமைப்பு ரீதியிலான முடிவையும் அரசாங்கம் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நஜிப்பிற்கு உதவுவதற்காக கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட 'நஜிப் ரசாக் ஒற்றுமை நிதி' (Tabung Solidariti Najib Razak) கணக்கை மூடுவதாக அம்னோ அறிவித்துள்ளது.

நிதி திரட்டும் இலக்கு எட்டப்பட்டு, தேவையான தொகை கிடைத்துவிட்டதால் இனி பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் திரட்ட வேண்டிய அவசியமில்லை என அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.

மேலும், SRC International Sdn Bhd நிறுவனத்தின் RM42 மில்லியன் நிதி முறைகேடு வழக்கில் நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட RM50 மில்லியன் அபராதம் இன்று முழுமையாகச் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பணம் செலுத்தும் மற்றும் நிர்வாக நடைமுறைகள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளன.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி மாமன்னர் வழங்கிய நிபந்தனை அடிப்படையிலான மன்னிப்பின் ஒரு பகுதியாக இந்த அபராதத்தைச் செலுத்த வேண்டியிருந்தது.

அந்த மன்னிப்பின் அடிப்படையில், நஜிப் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது தண்டனைக் காலம் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீடிக்கும்.

73 வயதான நஜிப், SRC International நிறுவனத்தின் RM42 மில்லியன் நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

அன்வாரின் இந்தக் கருத்து, அரசியல் நட்புறவுக்கும் ஊழலுக்கு எதிரான கொள்கைக்கும் இடையிலான வேறுபாட்டை அவர் வலியுறுத்தியுள்ளதை வெளிப்படுத்துகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.