ஷா ஆலாம், நவ.16: சிலாங்கூரில் உள்ள முதலாளிகள், குறிப்பாக தளவாடங்கள் (logistics) மற்றும் துறைமுகத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், மத்திய அரசின் முற்போக்கான ஊதியக் கொள்கையில் (Progressive Wage Policy – PWP) இணைய முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கொள்கை தொடர்பான விழிப்புணர்வையும் புரிதலையும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசு மனிதவளத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙா தெரிவித்தார்.
இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் புத்தாக்கக் கலாச்சாரத்துக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினரான அவர், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு என்பது அவர்களின் திறன் மேம்பாடு, உற்பத்தித்திறன் மற்றும் பணித்திறன் ஆகியவற்றின் முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙா
இது தொடர்பில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய டாக்டர் முகமட் ஃபஹ்மி, தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு தனியார் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும், அவ்வாறு விடப்பட்டால் பல்வேறு காரணங்களைக் கூறி நிறுவனங்கள் ஊதிய உயர்வைத் தவிர்க்கக்கூடும் என்றார்.
மேலும், மடாணி அரசு துணிச்சலான ஒரு முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியிருப்பதைத் தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கொள்கையின் நோக்கம் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதோடு நின்றுவிடாமல், அவர்களின் திறன்களையும் செயல்திறனையும் மேம்படுத்தி நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறனை உயர்த்துவதாகும் என அவர் விளக்கினார்.

இதற்கிடையில், முதலாளிகள் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தைப் பின்பற்றத் தவறினால் தொழிலாளர்கள் எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பான துணைக் கேள்விக்குப் பதிலளித்த அவர், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொழில்துறை நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் நீதிமன்றம் வாயிலாகப் புகார் அளிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
மத்திய அரசு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நாட்டின் குறைந்தபட்ச மாதாந்திர ஊதியத்தை 1,700 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட்டாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு நடவடிக்கையைச் சிலாங்கூர் மாநிலமும் பின்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.







