குறைந்தபட்ச மாதச் சம்பளம் RM2,000: ஒப்புதல் வழங்கிய தேசிய ஊதிய ஆலோசனைக் குழு

13 அக்டோபர் 2026, 2:16 AM
குறைந்தபட்ச மாதச் சம்பளம் RM2,000: ஒப்புதல் வழங்கிய தேசிய ஊதிய ஆலோசனைக் குழு

ஷா ஆலாம், அக். 13 – 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர குறைந்தபட்சச் சம்பளமான RM2,000க்கு, தொழிலாளர் சங்கங்கள் மற்றும் முதலாளிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ள தேசிய ஊதிய ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேசிய கருவூலத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான் இதனைத் தெரிவித்தார்.

இந்த RM2,000 குறைந்தபட்சச் சம்பள விகிதத்துக்கு தேசிய ஊதிய ஆலோசனைக் குழு அளவில் எவ்வித ஆட்சேபனையும் எழவில்லை என்றும், அந்தத் தொகை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமின்றி, முதலாளிகள் தரப்பின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ள தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவில் RM2,000 குறைந்தபட்சச் சம்பளத்துக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஆனால், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்குப் புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்துவதற்குக் கூடுதல் கால அவகாசம் வழங்குவது குறித்து அமைச்சரவை பரிசீலித்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, முதற்கட்டமாகப் பெரிய நிறுவனங்களில் புதிய குறைந்தபட்சச் சம்பளத் திட்டத்தை அமல்படுத்திவிட்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அவற்றின் வணிகச் செயல்பாடுகளைச் சீரமைத்துக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய குறைந்தபட்சச் சம்பளத் திட்டம் 2027 ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாகப் பெரிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப சம்பளம் அதிகரிக்காததால் பல்வேறு குடும்பங்கள் தங்களின் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.

இத்தகைய சூழலில், மாதாந்திர குறைந்தபட்சச் சம்பளத்தை RM2,000ஆக உயர்த்துவது தொழிலாளர்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பெரிய நிறுவனங்கள் குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்குவதுடன் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளக் கூடாது என்றும் ஜோஹான் வலியுறுத்தினார்.

மாறாக, நிறுவனங்கள் தங்களின் ஒட்டுமொத்த ஊதியக் கட்டமைப்பையும் முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கும்போது, அவர்களுக்கும் உயர் சம்பளப் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி குறைவடையும் நிலை ஏற்படலாம். இத்தகைய நிலை 'ஊதியச் சுருக்கம்' (Wage Compression) எனப்படுகிறது.

இதனைத் தவிர்ப்பதற்காக, நிறுவனங்கள் ஊழியர்களின் அனுபவம், கல்வித் தகுதி, திறன் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப ஊதிய விகிதங்களைச் சீரமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தகுதி பெற்றவர்களுக்கான ஆரம்பச் சம்பளத்தையும் நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், தனியார் துறையினர் ஊழியர்களின் வருமானக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டியாக, அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) நிர்ணயித்துள்ள RM3,400 வாழ்க்கைத் தேவைக்கான சம்பள அளவுகோலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஜோஹான் பரிந்துரைத்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.