ஷா ஆலாம், அக். 11 — மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை RM1,700லிருந்து RM2,000ஆக உயர்த்துவது குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க உதவும்.
இதனை சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு, குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பொருளாதார ரீதியில் ஓரளவு நிம்மதியை வழங்கும் என்று அவர் கூறினார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தங்களது தொழில் செயல்பாடுகளை மாற்றியமைத்துக்கொள்ள RM50 மில்லியனுக்கும் குறைவான விற்பனை வருவாயைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஊதிய உயர்வுடன், குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கான கல்வி உதவிகளும் தொடர்வது, குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க உதவும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.







