புத்ராஜெயா, அக். 12 – 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான வருடாந்திர விற்பனை வருவாயைக் கொண்ட குறு, சிறு & நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) மாதம் 2,000 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவதிலிருந்து 2027 ஜூன் மாதம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது அந்நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டு முறைகளைப் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறது என கருவூலத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஜோஹான் மஹ்மூட் மெரிக்கன் தெரிவித்தார்.
செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் சிறிய நிறுவனங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மலேசிய தகவல் துறை ஏற்பாடு செய்திருந்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான நடப்பு விவகாரங்களுக்கான விளக்கக் கூட்டத்தில் நேற்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊதிய உயர்வானது உற்பத்தித் திறன் அதிகரிப்புடன் இணைந்திருக்க வேண்டும்; அப்போதுதான் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றார் அவர்.
இதற்கிடையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் கடன் உத்தரவாத வசதிகளின் மொத்த அளவு, 50 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2027ஆம் ஆண்டில் 57 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிதியுதவிகள் மூலம் நிறுவனங்கள் தங்களது பணப்புழக்கத்தைச் சீராக நிர்வகித்தல், செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய உபகரணங்கள், தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், தகுதிபெறும் PMKS நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக ஜோஹான் குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டிலிருந்து, முதல் 150,000 ரிங்கிட் வருமானத்திற்கான வரி விகிதம் 15 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
அதேபோல், 150,001 ரிங்கிட் முதல் 600,000 ரிங்கிட் வரையிலான வருமானப் பிரிவுக்கான வரி விகிதம் 17 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
இந்த வரிக் குறைப்பு நடவடிக்கையால் சுமார் 300,000 நிறுவனங்கள் பயனடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதிபெறும் ஒவ்வொரு நிறுவனமும் ஆண்டுக்கு அதிகபட்சமாக 6,000 ரிங்கிட் வரை வரிச் சேமிப்பைப் பெற முடியும்.
அத்துடன், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களின் விளைவாக விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடைகள் மற்றும் செலவின அழுத்தங்களால் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், பேங்க் நெகாரா மலேசியா வழியாக கூடுதலாக ஐந்து பில்லியன் ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.







