ஷா ஆலாம், அக். 29: பணியிடங்களில் ஊழியர் மனநலக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கு செலவுகள், சட்டப் பொறுப்புகள் மற்றும் நிபுணத்துவப் பற்றாக்குறை ஆகியவை முக்கிய சவால்களாக இருப்பதாக மலேசிய முதலாளிகள் சங்கத் (MEF) தலைவர் டத்தோ டாக்டர் சையட் ஹுசைன் சையட் ஹுஸ்மான் தெரிவித்தார்.
முதலாளிகள் இக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், ஊழியர்களின் நலனும் உறுதிசெய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மனநலம் தொடர்பான தவறான கண்ணோட்டம் , ஊழியர்களின் அச்சம் மற்றும் ஆதரவு சேவைகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றார் அவர்.
ஊழியர்களுக்கு ரகசியமான உதவி சேவைகளை வழங்குதல், மனநலப் பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய மேலாளர்களுக்குப் பயிற்சியளித்தல், ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளை முதலாளிகள் மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நெருக்கடி நிலை ஏற்படும் வரை காத்திருக்காமல், மனநலப் பிரச்சனைகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் நெகிழ்வான வேலை ஏற்பாடுகளையும் பரிசீலிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இக்கொள்கையை இறுதி செய்வதற்கு முன், மலேசிய முதலாளிகள் சங்கம் (MEF) மற்றும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (MTUC) உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இதற்கிடையில், பணியிடங்களில் மனநல ஆதரவு அமைப்புகளையும் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் வலுப்படுத்தும் நோக்கில், மனிதவள அமைச்சு மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து மனநலக் கொள்கையை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அரசு நடத்தி வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.







