அடுத்தாண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு AI கற்பிக்கப்படும்

29 அக்டோபர் 2026, 8:05 AM
அடுத்தாண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு AI கற்பிக்கப்படும்

ஷா ஆலாம், அக். 29: மலேசியாவில் 2027-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ், தொடக்கப்பள்ளி மாணவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பப் பாடத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படைகளைக் கற்கவுள்ளனர்.

இத்தகவலைக் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். இடைநிலைப்பள்ளிகளிலும் தொடர்புடைய பாடங்கள் வழியாக AI கற்றல் வலுப்படுத்தப்படும் என அவர் கூறினார்.

AI தொடர்பான அடிப்படைக் கல்வியின் நோக்கம், மாணவர்கள் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவும், சந்தேகத்திற்குரிய தகவல்களை மதிப்பிடவும், தொழில்நுட்பத்தைப் பொறுப்புடனும் விவேகத்துடனும் பயன்படுத்தவும் பயிற்றுவிப்பதாகும் என்றார் அவர்.

கல்வி அமைச்சின் AI அறிவாற்றல் வழிகாட்டுதல்கள் கடந்த மே 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. AI தொழில்நுட்பத்தை விமர்சனச் சிந்தனையுடன், பாதுகாப்பாகவும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஃபட்லினா தெளிவுப்படுத்தினார்.

AI பயன்பாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பெற்றோர், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவருக்கும் பொறுப்பு இருப்பதாகக் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் மெர்போக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நஸ்ரி அபு ஹசானின் துணைக் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் AI தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாடாக, இவ்வாண்டு வரை 3,29,414 ஆசிரியர்களுக்கு AI அறிவாற்றல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ஆசிரியர்களும் AI தொடர்பான திறன்களைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், பயிற்சிகள் படிப்படியாகத் தொடர்ந்து வழங்கப்படும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.