கோலா லங்காட், அக். 5 — பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை ஒருதலைப்பட்சமாக அணுகாமல், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டும் என அவர் கூறினார்.
இதில், பெற்றோர் தங்களது பிள்ளைகள் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிப்பது முதல், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உரிய உதவிகளை வழங்குவது வரை பல்வேறு அம்சங்கள் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டியது, பள்ளிகளில் பாதுகாப்பின் நிலை மற்றும் தரத்தை எவ்வாறு மேலும் மேம்படுத்த முடியும் என்பதைத் தீர்மானிப்பதாகும்.
சமீபத்தில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்கு ஒன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து, சிறார் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சமூக ஊடகங்களில் எழுந்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அமிருடின் இதனைத் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பு என்பது பள்ளி வளாகத்திற்குள் மட்டுமே வரையறுக்கப்படவில்லை, குறிப்பாக பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறையைக் கண்காணிப்பதில் பெற்றோருக்கும் முக்கியப் பொறுப்பு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, மாணவர்களைச் சம்பந்தப்படுத்திய சம்பவங்களை அரசியல் பிரச்சனைகளாக மாற்றாமல், அதற்கான தீர்வுகளை அனைத்து தரப்பினரும் முதிர்ச்சியுடன் அணுக வேண்டும்.
அதேவேளை, ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் அவற்றைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாகாமல், நம்பிக்கைக்குரிய நபர்களிடம் முன்வந்து உதவி கோர வேண்டும்.







