புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ மன்னிப்புக் கோரினார்

16 நவம்பர் 2026, 2:35 AM
புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ மன்னிப்புக் கோரினார்

ஜகார்த்தா, நவ.16 – இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் உருவான புகைமூட்டம் மலேசியா மற்றும் சிங்கப்பூரைப் பாதித்ததற்காக, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இரு நாடுகளிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 49-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், தீயைக் கட்டுப்படுத்த இந்தோனேசியா விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், புகைமூட்டம் அண்டை நாடுகளுக்கும் பரவியதாகத் தெரிவித்தார்.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 71,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அந்நடவடிக்கைகளின்போது 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் இழக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கடுமையான எல் நினோ பருவநிலை நிகழ்வு தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளைச் சிக்கலாக்கியதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், காட்டுத்தீக்குக் காரணமான நிறுவனங்களுக்கு எதிராகவும் இந்தோனேசியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை 17 நிறுவனங்களின் சலுகை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 26 நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 104 நிறுவனங்கள் தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் பிரபோவோ தெரிவித்தார்.

மேலும், காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த புதிய அமைப்பொன்றை உருவாக்குவதுடன், தீ ஏற்பட்ட பின்னர் கட்டுப்படுத்தும் அணுகுமுறையைக் கடந்து, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தோனேசியா திட்டமிட்டுள்ளதாக அதிபர் செயலகம் தெரிவித்தது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.