சிங்கப்பூர், செப். 12 — 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10.74 மில்லியனைத் தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 4.39 விழுக்காடு அதிகரிப்பாகும்.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நெருக்கமான உறவு இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும் என மலேசியாவின் சிங்கப்பூர் உயர் ஆணையர் டத்தின் படுகா அனிசான் சித்தி ஹஜார் அட்னின் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ராசா மலேசியா 2026’ எனப்படும் உணவு மற்றும் சமையல் பிரச்சார நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது சித்தி ஹஜார் இதனைத் தெரிவித்தார்.
2026 மலேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ராசா மலேசியா 2026’ நிகழ்ச்சி, மலேசியாவின் பல்வேறு இனங்கள் மற்றும் மாநிலங்களின் பாரம்பரிய உணவுகள் மற்றும் சமையல் கலாச்சாரத்தை சிங்கப்பூர் மக்களுக்கும் அனைத்துலகப் பார்வையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.
நாட்டின் சுற்றுலா வாய்ப்புகளை உணவுக் கலாச்சாரத்துடன் இணைத்து மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த உணவுக் கண்காட்சிக்கு சிங்கப்பூரில் செயல்படும் சரவாக் வர்த்தக மற்றும் சுற்றுலா அலுவலகம் (STATOS), சபா வர்த்தக மற்றும் சுற்றுலா அலுவலகம் (STTOS) ஆகியவையும் ஆதரவு வழங்குகின்றன. மலேசிய உயர் ஆணையமும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.







