சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் மலேசியா வருகை

1 அக்டோபர் 2026, 3:20 AM
சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் மலேசியா வருகை

சிப்பாங், அக். 1: சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங், இன்று ஒரு நாள் அதிகாரப்பூர்வப் பணிப் பயணமாக மலேசியா வந்தடைந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் விநியோகச் சங்கிலி மீள்திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒரு நாள் பயணத்தின்போது, கான் கிம் யோங் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கானியை சந்திக்கவுள்ளார்.

மேலும், MITI மற்றும் சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சுக்கு இடையிலான மூன்றாவது அமைச்சர்கள் ஆண்டு கலந்துரையாடலுக்கு (AMD) அவர் இணைத் தலைமை வகிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புத்ராஜெயாவில் பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிரையும் அவர் சந்திப்பார்.

மூன்றாவது AMD கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, உலகளாவிய புவிசார் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சூழல் தொடர்ந்து சிக்கலானதாகவும் நிச்சயமற்றதாகவும் மாறிவரும் நிலையில், விநியோகச் சங்கிலியின் மீள்திறன் மற்றும் ஹலால் தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.

இந்தக் கலந்துரையாடலின் முக்கிய எதிர்பார்க்கப்படும் முடிவுகளில் ஒன்றாக, மலேசியா–சிங்கப்பூர் விநியோகச் சங்கிலி பணிக்குழுவுக்கான பணிநெறிமுறையை ஏற்றுக்கொள்வது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பணிக்குழு மூலம் இரு நாடுகளின் விநியோகச் சங்கிலியின் மீள்திறனை அதிகரிப்பது, நெருக்கடி காலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது, எல்லை தாண்டிய பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவது மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய இடையூறுகளை குறைப்பது ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பயணம், குறிப்பாக முதலீடு, வர்த்தகம் மற்றும் ஹலால் தொழில்துறை உள்ளிட்ட பரஸ்பர நன்மை பயக்கும் புதிய ஒத்துழைப்புத் துறைகளை ஆராய்வதற்கும் இரு நாடுகளுக்கும் வாய்ப்பாக அமையும்.

2025ஆம் ஆண்டில், உலகளவில் மலேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், ஆசியான் உறுப்பு நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் சிங்கப்பூர் திகழ்ந்தது.

அந்த ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு RM402.8 பில்லியனை எட்டியது.

அதே காலகட்டத்தில், ஆசியான் நாடுகளுக்கிடையே மலேசியாவில் அதிக அளவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை மேற்கொண்ட நாடாகவும் சிங்கப்பூர் விளங்கியது. சிங்கப்பூரின் மொத்த முதலீடு RM53.4 பில்லியனாக பதிவாகியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.