ஷா ஆலாம், நவ.15 – சிலாங்கூர் மாநில சுகாதாரக் கிளினிக்குகளுக்கு (KK) வருகை தரும் வெளிநாட்டுப் பிரஜைகளிடம் 40 ரிங்கிட்டும், மலேசியக் குடிமக்களிடம் ஒரு ரிங்கிட் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை (JKNS) விளக்கமளித்துள்ளது.
இருப்பினும், அவசர சிகிச்சை அல்லது உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அவர்களின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அவசரநிலையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என அத்துறை வலியுறுத்தியுள்ளது.
'No Wrong Door Policy' கொள்கைக்கு ஏற்ப, சிகிச்சைக்காக வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ஆரம்பகட்ட மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும், நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கிள்ளான் மாவட்டத்திலுள்ள சுகாதாரக் கிளினிக்குகளில் வெளிநாட்டு நோயாளிகளின் வருகை மற்றும் அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோயாளிகளின் வருகை அதிகமாக இருக்கும் சூழலில், உடல்நிலை சீராகவும் உடனடி சிகிச்சை தேவைப்படாத நிலையிலும் உள்ள வெளிநாட்டு நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட மாற்றுச் சிகிச்சை வசதிகள் குறித்து ஆலோசனை வழங்கப்படலாம்.
இருப்பினும், நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது சுகாதாரச் சேவைகளைப் பெறுவதற்கான அவர்களின் உரிமை பாதிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள மாநில சுகாதாரத் துறை, அனைவருக்கும் விரைவான, பாதுகாப்பான மற்றும் தரமான ஆரம்ப சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவித்துள்ளது.







