ஷா ஆலாம், நவ.16: சிலாங்கூர் மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான (EV) மின்னேற்றும் நிலையங்களை விரிவுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் மாநில அளவிலான பெருந்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைக்குப் பொறுப்பான அவர், இத்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு ஷா ஆலாம் மாநகராட்சியிடம் (MBSA) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இந்தப் பெருந்திட்டம், EV மின்னேற்றும் நிலையங்களை அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதுடன், விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், பொருத்தமான இடங்களை அடையாளம் காணவும் உதவும்.
தற்போதைய நிலவரப்படி, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) தனது நிர்வாகத்தின் கீழ் சாலையோரங்களில் 112 மின்னேற்றும் வசதிகளை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
அவற்றில் 20 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. அதேவேளையில், செலாயாங் ஊராட்சி மன்றத்தின் (MPS) கீழ் நான்கு நிலையங்களும், கோலா லங்காட் ஊராட்சி மன்றத்தின் (MPKL) கீழ் 21 நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
கிராமப்புறங்களிலும் மின்னேற்றும் வசதிகளை அதிகரிக்கும் வகையில், சபாக் பெர்னாம் மாவட்டத்தில் கூடுதல் நிலையங்கள் அமைப்பதற்கான பொருத்தமான இடங்கள் Worldwide Holdings Berhad நிறுவனத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
EV மின்னேற்றும் நிலையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு நேரடி மானியங்கள் வழங்குவது தற்போதைக்கு அவசியமில்லை என மாநில அரசு கருதுவதாகவும் இங் சீ ஹான் தெரிவித்தார்.
மாறாக, அனுமதிகளைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், பொருத்தமான இடங்களை அடையாளம் காணுதல் மற்றும் அரசு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மேலும், அடுக்குமாடி மற்றும் பல மாடிக் குடியிருப்புகளில் EV மின்னேற்றும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை சிலாங்கூர் PLANMalaysia தயாரித்துள்ளது.







