ஷா ஆலாம், நவ.16 – சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் தங்களது தொழில்களை விரிவுபடுத்துவதற்கு உதவும் வகையில், ஊராட்சி மன்றங்களுடன் (PBT) இணைந்து அவர்களுக்கான ஆதரவை வலுப்படுத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் தினம் 2026 (HPPKS 2026) நிகழ்ச்சி, அனைத்து வணிகர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலாம் சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பேசிய அவர், வணிகர்கள் தங்களது தொழில்களைத் தொடர்ந்து நடத்துவதுடன், அடுத்தகட்ட வளர்ச்சியை அடைவதற்குத் தேவையான உதவிகளையும் ஊராட்சி மன்றங்கள் மூலம் பெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், சிறு வணிகர்களின் தொழில்கள் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், சமூக மற்றும் மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற HPPKS 2026 நிகழ்ச்சியில் 100 தொழில்முனைவோர் பங்கேற்றதுடன், 15,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனிடையே, இந்நிகழ்ச்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விற்பனை மற்றும் வணிக நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்தும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. குறிப்பாக, சிலாங்கூரின் `PLATS` வாயிலாகக் கிடைக்கும் வணிக வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், PLATS Raja Seller Selangor போட்டி, PLATS Live Sales Challenge, விற்பனை தளங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான நிதியுதவி, பயிற்சி மற்றும் ஆதரவுத் திட்டங்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.







