ஷா ஆலாம், நவ.16: சிலாங்கூரின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிக் தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சிகள், அவர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MSU பல்கலைக்கழகத்தின் மூத்த பொருளியல் விரிவுரையாளர் சித்தி அஸ்மஹான் முகமட் அலி இதனை தெரிவித்தார்.
இப்பயிற்சிகள் மூலம் தொழிலாளர்கள் திறன் சான்றிதழ்கள் மற்றும் தொழில்நுட்ப, தொழிற்கல்விப் பயிற்சி (TVET) தகுதிகளைப் பெற்று, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளைத் தேட முடியும் என்றார் அவர்.
கிக் தொழிலில் நீண்டகால வருமானப் பாதுகாப்பு இல்லாததுடன், அதிக உடல் உழைப்பும் தேவைப்படுவதால், மாற்றுத் தொழில்களுக்கு மாறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
RM10 மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ் சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (STDC) செயல்படுத்தவுள்ள இத்திட்டத்தில், தொழில்நுட்ப அறிமுகப் பயிற்சிகளும், வளர்ந்து வரும் புதிய தொழில்துறைகளில் நுழைவதற்கான விரைவுப் பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன.
இதற்கிடையில், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட 5,000 பி-ஹெய்லிங் (P-hailing) தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் RM100 மதிப்பிலான 'வவுச்சர் கித்தா சிலாங்கூர் கிக்' வழங்கப்படும் எனவும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார்.
நிலையான மாத வருமானம் இல்லாததால் வங்கிக் கடன்கள் மற்றும் நிதி வசதிகளைப் பெறுவதில் பி-ஹெய்லிங் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இத்தகைய உதவிகள் மிகவும் அவசியமானவை என சித்தி அஸ்மஹான் குறிப்பிட்டார்.







