ஷா ஆலாம், நவ.15 – சிலாங்கூர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி நான்கு ஆற்று கண்காணிப்பு நிலையங்களில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளதுடன், ஒன்பது மாவட்டங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் (JPS) InfoBanjir இணையத்தளத் தகவலின்படி, அபாய அளவை எட்டியுள்ள நான்கு நிலையங்களில் மூன்று கோலா சிலாங்கூர் மாவட்டத்திலும், ஒன்று கிள்ளான் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
கோலா சிலாங்கூரில் தெலுக் பென்யாமு ஜெட்டி பகுதியில் 6.254 மீட்டரும், சுங்கை யூ 1-இல் 3.474 மீட்டரும், ஈஜோக்கில் 3.72 மீட்டரும் நீர்மட்டம் பதிவாகியுள்ளது. கிள்ளானில் உள்ள துகு கெரிஸ் (F2) நிலையத்திலும் நீர் மட்டம் 4.279 மீட்டராகப் பதிவாகியுள்ளது.
மேலும், நான்கு கண்காணிப்பு நிலையங்களில் எச்சரிக்கை அளவிலும், ஆறு நிலையங்களில் விழிப்புநிலை அளவிலும் நீர்மட்டம் காணப்படுகிறது.
இதற்கிடையில், மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள மழைப்பொழிவு கண்காணிப்பு நிலையங்களில் 31 இடங்களில் கனமழையும், மூன்று இடங்களில் மிகக் கனமழையும் பதிவாகியுள்ளன.
கிள்ளான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 நிலையங்களில் கனமழை பதிவாகியுள்ளது. சபாக் பெர்னாமில் இரண்டு நிலையங்களில் மிகக் கனமழையும், நான்கு நிலையங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன.

கோலா சிலாங்கூர் மற்றும் செப்பாங் மாவட்டங்களில் தலா ஐந்து நிலையங்களிலும், கோலா லங்காட் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் தலா மூன்று நிலையங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது.
InfoBanjir வகைப்படுத்தலின்படி, ஆற்றின் நீர்மட்டம் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை எட்டும்போது அபாயநிலை அறிவிக்கப்படுகிறது.
அத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். எச்சரிக்கை நிலையில் உள்ளவர்கள் வெளியேற்றத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்.
இந்நிலையில், சிலாங்கூர் முழுவதும் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) இன்று மாலை 6 மணி வரை எச்சரிக்கை விடுத்துள்ளது.







