ஷா ஆலாம், நவ.14: சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்டுள்ள 56 வெள்ள அபாயப் பகுதிகளில், முன்னுரிமை அடிப்படையில் வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இதற்கான முக்கியப் பகுதிகள், மாநில நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையால் தேர்வு செய்யப்பட்டு, அதன் பட்டியல் விரைவில் நடைபெறவுள்ள சிறப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.
இதனை 2027-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தலைமையில் இந்தப் பணிக்குழு செயல்படும்.
இதற்கிடையில், சிலாங்கூரில் வெள்ளநீர் தேக்கக் குளங்களைக் கொண்டுள்ள மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில், அவற்றைப் பராமரிப்பதில் சில மேம்பாட்டாளர்கள் அலட்சியம் காட்டுவது மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அமிருடின் தெரிவித்தார்.
இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறும் மேம்பாட்டாளர்களுக்கு எதிராக, திட்டங்களின் அனுமதிகளை ரத்து செய்வது அல்லது கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவு பிறப்பிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைச் சிறப்புப் பணிக்குழு ஒவ்வொரு மாதமும் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கான அனுமதி நடைமுறைகளை விரைவுபடுத்தும் நோக்கில் 'பசுமை வழித்தடம்' (Green Lane) என்ற புதிய நடைமுறையும் 2027-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.







