ஷா ஆலாம், நவ.15 – பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள சிலாங்கூர் மாநிலத்தின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதனை இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை ஆட்சிக்குழு உறுப்பினரும், பேரிடர் மேலாண்மைப் பொறுப்பாளருமான முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பொதுமக்களின் நலன் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், பள்ளிகளின் வசதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களின் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கிக் பொருளாதாரத் துறையில் பணியாற்றுவோருக்கான வவுச்சர் திட்டம் மற்றும் மாதந்தோறும் 1,500 ரிங்கிட் உதவித்தொகை வழங்கும் SPARK திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஷா ஆலாமில் நடைபெற்ற சிலாங்கூர் கல்வி உச்சநிலை மாநாடு 2026 நிறைவு விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் அவசரத் தேவைகளுக்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார்.
'முன்னேறும் மாநிலம், வலுப்பெறும் நிறுவனங்கள், பாதுகாக்கப்படும் மக்கள்' என்ற கருப்பொருளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு மொத்தம் 3.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 1.9 பில்லியன் ரிங்கிட் நிர்வாகச் செலவினங்களுக்கும், 1.4 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுச் செலவினங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.







