கோலாலம்பூர், அக். 11 — 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த RM1.1 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும், நாட்டுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்டெடுப்பதற்கும் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஆற்றலை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரித்திருப்பதை இந்த நிதி ஒதுக்கீடு வெளிப்படுத்துவதாக எம்ஏசிசி குறிப்பிட்டது.
இதற்கிடையில், பொதுமக்களின் நிதி மற்றும் சொத்துகளை நிர்வகிக்கும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் கடுமையாக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் தொடர்பான சட்டமசோதாவை (Government-Owned Entities Bill) உருவாக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கையையும் எம்ஏசிசி வரவேற்றுள்ளது.
மேலும், பொதுநிதி நிர்வாகத்தில் நல்லாட்சியையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்த கடன்களைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் வசூலிக்கப்படும் அனைத்துத் தொகைகளையும் மீண்டும் முதலீடு செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவையும் ஆணையம் சுட்டிக்காட்டியது.
இந்த நடவடிக்கை, அரசாங்க நிதிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதுடன், அவை உண்மையில் உதவி பெற வேண்டிய இலக்குக் குழுக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக எம்ஏசிசி தெரிவித்தது.
அதேவேளையில், அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள அரசாங்கக் கொள்முதல் சட்டத்தின் (Government Procurement Act) கீழ், திட்டங்கள் தொடர்பான தகவல்கள், ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் மற்றும் ஒப்பந்த மதிப்புகள் உள்ளிட்டவற்றைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவையும் ஆணையம் வரவேற்றது.
இதனிடையே, காலாவதியான சட்டங்கள் மற்றும் தற்போதைய சட்டக் குறைபாடுகளை அடையாளம் காணும் நோக்கில் சட்டச் சீர்திருத்த ஆணையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் அரசாங்கத்தின் முயற்சிக்கும் எம்ஏசிசி ஆதரவு தெரிவித்துள்ளது.







