ஷா ஆலாம், அக்.9 – நாட்டின் முன்னேற்றத்தின் பலன்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதோடு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
இதனை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஃபேஸ்புக் பதிவின் வாயிலாக தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள ஐந்தாவது மடாணி வரவு செலவுத் திட்டம், வானளாவிய இலட்சியங்களையும் மண்ணில் வேரூன்றிய அடித்தளத்தையும் கொண்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்ட உரையைப் பொதுமக்கள் முக்கியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் முன்னணி டிஜிட்டல் தளங்கள் வழியாக நேரலையில் கண்டுகளிக்குமாறும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
‘மலேசியா மடாணி: வானளாவிய இலட்சியம், மண்ணில் வேரூன்றிய அடித்தளம்’ என்ற கருப்பொருளில் இந்த வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மடாணி பொருளாதாரத்தின் மூன்று முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அதன்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உச்சவரம்பை உயர்த்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கான அடித்தளத்தை மேம்படுத்துவது, அத்துடன் நாட்டின் நிர்வாகத்தில் நல்லாட்சியையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பது ஆகியவை முக்கிய இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.







