சுங்கை பூலோ, நவ.14: சிலாங்கூர், சுங்கை பூலோ பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 குடும்பங்களுக்கு சுமார் RM1 மில்லியன் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் இன்று வழங்கப்பட்டன.
மனிதவள அமைச்சு (KESUMA), மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) வாயிலாக அதன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் இந்த நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
மைக்ரோவேவ் அடுப்பு, எரிவாயு அடுப்பு, இஸ்திரிப் பெட்டி, எரிவாயுக் குழாய் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவி, மின்சாரத் தண்ணீர் கொதிகலன், மின்சார அரிசிச் சமைப்பான், மிக்ஸி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் 'சும்பாங்கான் சந்துனி காசே மடாணி' (Sumbangan Santuni Kasih MADANI) வாகன அணிவகுப்பில் பங்கேற்பதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
கம்போங் மெலாயு சுபாங், கம்போங் குபு காஜா, கம்போங் பாயா ஜாராஸ் ஹிலிர், கம்போங் மெர்பாவ் செம்பாக், கம்போங் சுங்கை பெலோங், கம்போங் பாயா ஜாராஸ் தெங்கா மற்றும் கம்போங் பாயா ஜாராஸ் டாலாம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான கூடுதல் நிவாரண நிதியுதவி குறித்தும் ரமணன் அறிவித்தார். சிலாங்கூரில் ஒருமுறை வழங்கப்படும் RM2,500 சிறப்பு வெள்ள நிவாரண உதவிக்காகப் பதிவு செய்யத் தவறிய குடும்பங்களுக்கு RM1,250 வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
மேலும், தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்கியிருந்து பதிவு செய்துகொண்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசும் RM500 உதவித்தொகை வழங்குவதாகத் தெரிவித்தார்.
சுங்கை பூலோ பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்கு நீண்டகாலத் தீர்வு காணும் வகையில், கூடுதல் வெள்ளநீர் தேக்கக் குளங்கள் அமைப்பதுடன் ஆறுகளை ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என ரமணன் கூறினார்.







