சுங்கை பூலோ தொகுதியில் இலவசமாக 10,000 மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – ரமணன்

3 ஆகஸ்ட் 2026, 1:00 AM
சுங்கை பூலோ தொகுதியில் இலவசமாக 10,000 மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – ரமணன்

ஷா ஆலம், ஆகஸ்ட் 3 — சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இளையோரின் தினசரி பிரயாண வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அந்நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ. ரமணன் அவர்கள் நேற்று முதல் மிதிவண்டிகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக மொத்தம் 10,000 மிதிவண்டிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்துத் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சுங்கை பூலோ நாடாளுமன்றத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் (SPM) சிறந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் போது தாம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இளையோர் பள்ளிக்குச் செல்வதற்கும், உயர்கல்வி நிலையங்களுக்கும் வேலைக்கும் செல்வதற்கும், அத்துடன் தங்களின் அன்றாட நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கும் போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற அளவில் நடைபெற்ற தேசிய மாதக் கொண்டாட்ட விழாவில், முதல் கட்டமாக 500 மிதிவண்டிகளை இளைஞர்களுக்கு அவர் நேரில் வழங்கினார்.

வளர்ச்சி என்பது வெறும் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், மக்களின் நலனை உயர்த்துவதோடு, நேரடிப் பலன்களை அளிக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில்தான் அது அடங்கியுள்ளது என்றார்.

தான் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் சமூகத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக, இனம், மதம் மற்றும் பின்னணியைப் பாராமல் சமுதாயத்திற்குப் பயனளிக்கும் பல புதிய திட்டங்களை நான் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்துச் செல்வேன்.

சுங்கை பூலோ வாழ் மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக எனக்கு வழங்கப்பட்ட இந்த மக்கள் சேவையை முழுப் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து நிறைவேற்றுவேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.