ஷா ஆலாம், அக் 8: மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க, சுங்கை பூலோ கேடிஎம் (KTM) இரயில் நிலையம் அருகிலுள்ள கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலையின் வடிகால் அமைப்பு உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும்.
உயரமான பகுதிகளில் இருந்து வரும் நீரைத் தாங்குவதற்காக தற்காலிகத் தேக்கக் குளம் ஒன்றை அமைக்கவும் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தியோ பரிந்துரைத்தார்.
"இது நாம் உடனடியாகத் தீர்க்க வேண்டிய ஒரு பாதுகாப்புப் பிரச்சினை. கனமழை எப்போது பெய்யும் என்று நமக்குத் தெரியாததால், ஓரிரு ஆண்டுகள் வரை நாம் காத்திருக்க முடியாது. இந்தச் சூழ்நிலை சொத்துச் சேதத்தையோ அல்லது உயிரிழப்பையோ ஏற்படுத்துவதை நாம் விரும்பவில்லை," என்று அவர் கூறியதாக, தி ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம், பலத்த மழையைத் தொடர்ந்து சுங்கை காசி (Sungai Gasi) நதி பொங்கி வழிந்ததால், சுங்கை பூலோ KTM நிலையம் அருகிலுள்ள FT54 சாலையின் இருபுறமும் 0.6 மீட்டர் உயரத்திற்கு வெள்ள நீர் சூழ்ந்தது.
தற்போதுள்ள வடிகால் அமைப்பின் திறன் நீர்வரத்தைத் தாங்குவதற்குப் போதுமானதாக இல்லை என்றும், சில சாக்கடைகள் சேதமடைந்து அரிப்புக்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கோபிந்த் கூறினார்.
இதற்கிடையில்,சுங்கை காசி நதிக்கரையில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, அப்பகுதியில் நதி கரை புரண்டோடுவதால் ஏற்படும் வெள்ளம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சிலாங்கூர் நீர்ப்பாசன- வடிகால் துறையின் (JPS) உதவி இயக்குநர் முஹம்மது சக்வான் ஃபிக்ரி முகமது ஹஸ்னான் தெரிவித்தார்.

"இருப்பினும், உயரமான பகுதிகளில் இருந்து வரும் நீர் இன்னும் FT54 சாலையில் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.
இவ்வேளையில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்பப் பரிந்துரைகள் தயாராக உள்ளன. ஆனால் இதற்கான நிதி மற்றும் அமலாக்கம், சிலாங்கூர் நீர்ப்பாசன-வடிகால் துறை , பெட்டாலிங் மாவட்ட பொதுப்பணித்துறை (JKR) மற்றும் இரயில்வே சொத்து கழகம் (RAC) ஆகியவற்றின் அதிகார வரம்பிற்குள் வருவதால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கோபிந் தெரிவித்தார்.

"குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள், அதற்கான செலவு மற்றும் பொறுப்பான அமைப்புகளைத் தீர்மானிக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் பிரதிநிதிகளுடன் இவ்வாரம் ஒரு கூட்டம் நடத்தப்படும்.
அடுத்த வாரம் ஒரு தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறோம்.
இதன் மூலம் மேம்பாட்டு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும். தற்போது உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் குறுகிய கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அடிப்படைப் பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வை வழங்கவில்லை," என்று அவர் கூறினார்.








