கோலாலம்பூர், நவ.14: மலேசியா ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகளை எதிர்கொண்டு வருகிறது.
நவீனகாலப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில் நாட்டின் தற்காப்புப் படையினரின் இணையப் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய சூழலில் இணையவழித் தாக்குதல்கள், கணினி மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளுக்குள் அத்துமீறி ஊடுருவுதல், பயங்கரவாதக் குழுக்களின் நடமாட்டம் உள்ளிட்டவையும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியச் சவால்களாக உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் மலேசிய ஆயுதப்படையின் (ATM) உயர் அதிகாரிகளைச் சந்தித்து, தற்காப்புப் படைக்குள் இணையப் பாதுகாப்புப் பிரிவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று 515-ஆவது ரெஜிமென்ட் பிராந்திய இராணுவ முகாமில் நடைபெற்ற தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் 3.0 (PLKN 3.0) பங்கேற்பாளர்களுடனான 'அன்வாரைச் சந்திப்போம்' நிகழ்ச்சியில் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
நவீன இணையவழி அச்சுறுத்தல்களின் தீவிரத்தை விளக்கிய பிரதமர், அண்மையில் அமெரிக்காவில் விமான நிலையங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பையும் சுட்டிக்காட்டினார்.
உலகின் முன்னேறிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட அமெரிக்காவில்கூட தொலைத்தொடர்பு அமைப்புகளில் ஏற்பட்ட பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதில் சிக்கல் நிலவியதாகவும், இது தொடர்பான இறுதி விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மலேசியாவின் தற்காப்பு உத்திகளும் ராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் நடைமுறைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) உள்ளிட்ட நவீன போர் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஆயுதப்படைகள் தயாராக இருக்க வேண்டும். அதேவேளையில் ராணுவத் தற்காப்பு முறைகளும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக, பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார். கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கு அடுத்தபடியாக அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெறும் அமைச்சுகளில் தற்காப்பு அமைச்சும் இடம்பெறுவதாக அவர் கூறினார்.
இருப்பினும், பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.






