ஜூலை முதல் ஏடிஎம்களில் 1 ரிங்கிட் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்

16 ஜூன் 2026, 2:00 AM
ஜூலை முதல் ஏடிஎம்களில் 1 ரிங்கிட் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்

கோலாலம்பூர், ஜூன் 16 – நாட்டில் உள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி முதல், எந்தவொரு வங்கியின் தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம் (ATM) அல்லது ஸ்மார்ட் மறுசுழற்சி இயந்திரம் (SRM) மூலமாக ஒரு ரிங்கிட் (RM1) கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் மூன்று முக்கிய நிதிச் சேவை சங்கங்கள் கூட்டு அறிக்கை ஒன்றின் வாயிலாக இத்தகவலை வெளியிட்டுள்ளன.

மலேசிய வங்கி சங்கம் (ABM), மலேசிய இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் சங்கம் (AIBIM), மலேசிய மேம்பாட்டு நிதி நிறுவனங்களின் சங்கம் (ADFIM) ஆகியவையே அந்த மூன்று அமைப்புகளாகும்.

இந்த முயற்சியின் மூலம், டெபிட் கார்ட் (Debit Card) வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள 14,000 மேற்பட்ட ஏடிஎம் மற்றும் எஸ்ஆர்எம் இயந்திரங்களைப் பயன்படுத்தி, எந்தவொரு வரம்பும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

அவர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் என்பது இதில் ஒரு தடையாக இருக்காது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சலுகை மலேசியாவில் உள்ள வங்கிகளால் மட்டுமே இயக்கப்படும் இயந்திரங்களுக்குப் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மலேசியப் பேமெண்ட்ஸ் நெட்வொர்க் (PayNet) நிறுவனத்துடனான கூட்டு முயற்சியின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிதிச் சேவைகளை மிக எளிதாகவும், மலிவு விலையிலும் வழங்குவதில் வங்கித் துறை கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

மலேசியர்களின் அன்றாட வாழ்க்கையை நிர்வகிப்பதில் ரொக்கப் பணம் (Cash) என்பது இன்னும் ஒரு முக்கியமான மற்றும் அவசியமான கட்டண முறையாக இருந்து வருவதை வங்கித் துறை நன்கு உணர்ந்துள்ளது.

இதற்கேற்ப, வங்கிகளுக்கு இடையிலான ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வது, மக்களுக்கு எளிதான சேவையை உறுதி செய்வதோடு, அவர்களின் தினசரி நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.