சிலாங்கூர் பட்ஜெட் 2027: செந்தோசா தொகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்த குணராஜ் வலியுறுத்து

20 அக்டோபர் 2026, 2:34 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2027: செந்தோசா தொகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்த குணராஜ் வலியுறுத்து

ஷா ஆலாம், அக். 20 – சிலாங்கூரின் செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்க வெள்ளத் தடுப்புத் திட்டங்களை 2027-ஆம் ஆண்டு சிலாங்கூர் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடிகால் அமைப்புகளை மேம்படுத்துதல், பெரிய வடிகால்களை அமைத்தல் மற்றும் நீர்த்தேக்கக் குளங்களைக் கட்டுதல் உள்ளிட்டவை அத்திட்டங்களில் அடங்கும்.

இதனை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்

அப்பகுதியில் வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சில முயற்சிகள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாறிவரும் வானிலை காரணமாக மழை தீவிரமடைந்து வருவதால், இத்திட்டங்களை விரைவுபடுத்துவது அவசியம் என்றார்.

மீடியா சிலாங்கூரின் SKOP நிகழ்ச்சியில் பேசிய அவர், செந்தோசா தொகுதியை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து முழுமையாக விடுவிப்பதே தமது இலக்கு எனக் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் பெரிய அளவிலான வெள்ளம் ஏற்படவில்லை என்றாலும், சில பகுதிகளில் திடீர் வெள்ளம் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்குத் தற்காலிகத் தீர்வுகளுக்குப் பதிலாக, நீண்டகால அடிப்படையிலான தீர்வுகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கனமழையின்போது அதிகளவிலான நீரை வெளியேற்ற தற்போதுள்ள வடிகால் அமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும் என குணராஜ் வலியுறுத்தினார். இதன் மூலம் வடிகால்களில் நீர் நிரம்பி வழிவதையும், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதையும் குறைக்க முடியும்.

வடிகால்களின் செயல்பாடு மழைநீரை ஆறுகளுக்குக் கொண்டு செல்வதுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது; அதிக மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களில் நீரைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் திறனும் அவற்றுக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், செந்தோசா பகுதியில் வெள்ளத் தடுப்பு அமைப்புகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காகப் பல நீர்த்தேக்கக் குளங்களை அமைக்க கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் (MBDK) முன்மொழிந்துள்ளதாகவும் குணராஜ் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில், வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 2027-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவுபடுத்த வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண் அரிப்பு அபாயத்தைக் குறைக்க எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் (PETRA) கீழ் மேற்கொள்ளப்பட்ட ஏழு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக முன்னதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தார்.

மொத்தம் RM83 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டங்களைச் சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) செயல்படுத்தியுள்ளது. இதில் ஆறுகளை மேம்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் மற்றும் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண் அரிப்பைத் தடுப்பதற்கான பணிகளும் அடங்குகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.