வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், ஒப்பந்தங்கள் குறித்து சிலாங்கூர் அரசு மறுஆய்வு

3 நவம்பர் 2026, 9:12 AM
வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், ஒப்பந்தங்கள் குறித்து சிலாங்கூர் அரசு மறுஆய்வு

ஷா ஆலாம், நவ.3: சுங்கை பூலோ பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, கம்போங் மலாயு சுபாங் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதற்காக ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் சிலாங்கூர் அரசு மறுஆய்வு செய்யவுள்ளது.

குறிப்பாக, ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டும் இதுவரை முழுமையடையாத வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, அவற்றை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதற்காக, வரும் நவம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையுடன் (JPS/DID) சிறப்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான சந்திப்பின்போது, வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதற்காக ஏற்கெனவே நடைபெற்று வரும் திட்டங்களைத் துரிதப்படுத்துவது தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.

அவற்றில், சுங்கை டாமான்சாரா ஆற்றை ஆழப்படுத்தும் திட்டம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஆற்றின் நீரோட்டத்தை மேம்படுத்தி, நீர்மட்டம் உயர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுவதைத் தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதனிடையே, கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டும் இன்னும் நிறைவடையாத சில திட்டங்கள் குறித்தும் நடைபெறவுள்ள கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என அமிருடின் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து கம்போங் மலாயு சுபாங், சியாந்தான் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு (PPS) அவர் நேரில் சென்றார்.

அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்திப்பில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் முகமட் இசுவான் அகமட் காசிம் ஆகியோரும் உடனிருந்தனர்.

தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பார்வையிட்ட மந்திரி பெசார், கம்போங் மலாயு சுபாங் சுகாதார மருத்துவமனைக்கும் நேரில் சென்று வெள்ளத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்தார்.

குறிப்பாக, குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் மாநில அரசின் முதன்மையான கவலையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வெள்ளப் பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.