உலு சிலாங்கூர், அக். 28 — இன்று காலை சுமார் 7.15 மணியளவில், கோலாலம்பூர்–ஈப்போ சாலையில் பன்றி மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் எதிர்ப்புறச் சாலையில் நுழைந்த கார் லோரியுடன் மோதியதில், உலு பெர்னாம் தேசியப் பள்ளியின் (SK Hulu Bernam) தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஹர்மான் ஹருன் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பத்தாங் காலியிலிருந்து உலு பெர்னாம் நோக்கிக் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், சாலையின் இடப்புறத்திலிருந்து குறுக்கே சென்ற பன்றி மீது கார் மோதியிருக்கலாம் என நம்பப்படுவதாக உலு சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைவர் சூப்பிரண்டெண்டன் எம். மணிமாறன் அறிக்கையில் தெரிவித்தார்.
இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப்புறச் சாலையில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அச்சமயம் எதிர்த்திசையில் சென்றுகொண்டிருந்த லோரி எதிரே வந்த காரைத் தவிர்க்க முடியாமல் அதன் மீது மோதியதாக மணிமாறன் கூறினார்.
இந்த விபத்தின் ஹர்மான் ஹருன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லோரி ஓட்டுநருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கோலா குபு பாரு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இவ்விபத்து தொடர்பான விசாரணை, 1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மணிமாறன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், விபத்து தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து காவல்துறையின் விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தகவல்களைப் போக்குவரத்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூருல் அனாத்தி ஸுல்கிஃப்லியிடம் 03-6064 1222 என்ற தொலைபேசி எண் வாயிலாகத் தெரிவிக்கலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் எனக் காவல்துறை தெரிவித்தது.







