ஷா ஆலாம், அக்.22: வேலை நேரம் நிறைவடைந்தவுடன் தொழிலாளர்களின் பொறுப்பு முடிவடையலாம்; ஆனால் அவர்களைச் சூழ்ந்துள்ள விபத்து அபாயங்கள் முடிவடைவதில்லை.
இல்லம், விடுமுறை, விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தனிப்பட்ட பயணம் என பணியிடத்திற்கு அப்பாற்பட்ட நேரங்களிலும் எதிர்பாராத விபத்துகள் ஏற்படக்கூடும். அவ்வாறான சம்பவங்கள் தொழிலாளர்களின் உடல்நலனைப் பாதிப்பதுடன், அவர்களின் வருமானத்திலும் குடும்பத்தின் பொருளாதார நிலைத்தன்மையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இத்தகைய எதிர்பாராத சூழ்நிலைகளில் தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூகப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், பெர்கேசோ (PERKESO) ‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது.
வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட காலங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் விபத்துகளுக்குப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
1969ஆம் ஆண்டின் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் உள்ளூர் தொழிலாளர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட 1.1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இத்திட்டத்தின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என பெர்கேசோவின் நலன்கள் பிரிவின் உயர் நிர்வாக அதிகாரி மகேசன் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த தொழிலாளர் பாதுகாப்புத் திட்டங்கள் பெரும்பாலும் பணியிடத்தில் அல்லது வேலை தொடர்பான பயணங்களின்போது ஏற்படும் விபத்துகளை மையமாகக் கொண்டிருந்தன.
எனினும், தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பணியிடத்துடன் நிறைவடைவதில்லை. பணிநேரம் முடிந்த பின்னரும் அவர்கள் பல்வேறு தனிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அந்தக் காலகட்டத்திலும் விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக மகேசன் கூறினார்.

எனவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்புத் திட்டங்களுக்கு மாற்றாக ‘லிண்டுங் 24 ஜாம்’ அறிமுகப்படுத்தப்படவில்லை ; மாறாக, வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட காலங்களில் ஏற்படும் விபத்துகளால் உருவாகியுள்ள பாதுகாப்பு இடைவெளியை நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
விபத்தினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளுடன், அதனைத் தொடர்ந்து உருவாகக்கூடிய பொருளாதாரச் சுமையையும் கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
விபத்து காரணமாக மருத்துவரால் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டால், அந்தக் காலப்பகுதியில் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்ய நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும், விபத்துக்குப் பின்னர் தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் மற்றும் உடலுக்குள் பொருத்தப்படும் மருத்துவச் சாதனங்களுக்கான செலவுத் தொகையும் திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன.

விபத்தின் விளைவாக நிரந்தரமான காயம் அல்லது ஊனம் ஏற்பட்டால், தகுதியுடைய தொழிலாளருக்கு நிரந்தர ஊனமுற்றோர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இதன் மூலம், ‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டம் விபத்து ஏற்பட்டவுடன் ஒருமுறை நிதியுதவி வழங்குவதுடன் நிறைவுபெறும் திட்டமாக அமையவில்லை.
மாறாக, விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மருத்துவச் சிகிச்சை, வருமான இழப்பை எதிர்கொள்ளும் காலம் மற்றும் தொழிலாளர் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரையிலான மீட்பு நடவடிக்கைகள் என பல்வேறு கட்டங்களிலும் தேவையான ஆதரவை வழங்கும் விரிவான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடாக அமைந்துள்ளது என மகேசன் குறிப்பிட்டார்.

இதனிடையே, ‘லிண்டோங் 24 ஜாம்’ (Lindung 24 Jam) திட்டத்தில் இதுவரை பங்களிப்பு செய்யாமல் இருக்கும் சுமார் 12 லட்சம் தொழிலாளர்கள் மீண்டும் இணைந்துகொள்ளுமாறு அண்மையில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அழைப்பு விடுத்திருந்தார்.
தொழிலாளர்களை இத்திட்டத்தில் மீண்டும் இணைய ஊக்குவிக்கும் வகையில், 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஆண்டுக்கு கூடுதலாக 150 ரிங்கிட் வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.







