கோலாலம்பூர், அக்.30 – பெட்டாலிங் ஜெயா, பிஜேஎஸ் 4 பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவரின் மீது ஆசிட் திரவத்தை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் அவரது காதலனான வெளிநாட்டு ஆடவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது சிகிச்சைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (PPUM) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷம்சுடின் மாமாட் அறிக்கையில் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண் வெளிநாட்டுப் பிரஜை என்றும், அவர் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பல சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 325-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைப் போலீசார் தேடுவதாகவும் ஷம்சுடின் விளக்கமளித்தார்.







