
ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கான ஆரம்பக் கல்விச் செலவைக் குறைக்கும் நோக்கில், பாலர் பள்ளி உதவித் திட்டம் (துனாஸ்), அடுத்தாண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக 2027-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் RM2 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், மாதாந்திர குடும்ப வருமானம் RM5,000 மற்றும் அதற்குக் குறைவாகக் கொண்ட தகுதியான குடும்பங்களுக்கு, ஐந்து முதல் ஆறு வயதுடைய பிள்ளைகளின் பாலர் கல்விச் செலவுகளுக்காக மாதந்தோறும் RM50 உதவித்தொகை வழங்கப்படும்.

தற்போதைய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஆரம்பக் கல்விக்காக முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் அதிகமான செலவுகளைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமிருடின் குறிப்பிட்டார்.
எனவே, குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியைத் தொடர்வதற்கு ஆதரவளிப்பது மாநில அரசின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட துனாஸ் திட்டத்தின் மூலம், 2023-ஆம் ஆண்டு வரை மொத்தம் 21,236 பெற்றோர்கள் பயனடைந்துள்ளனர்.








