SIBS@ASEAN மூலம் சிலாங்கூர் நிறுவனங்களின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தத் திட்டம்

13 நவம்பர் 2026, 9:44 AM
SIBS@ASEAN மூலம் சிலாங்கூர் நிறுவனங்களின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தத் திட்டம்

ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரை ஆசியாவில் (ASEAN) முக்கிய வர்த்தக நுழைவாயிலாக உருவாக்கும் நோக்கில், சிலாங்கூர் சர்வதேச வர்த்தக உச்சநிலை மாநாட்டை (SIBS) ஆசியான் நாடுகளுக்கும் விரிவுபடுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, SIBS@ASEAN என்ற பெயரில் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆண்டுதோறும் ஆசியான் நாடுகளில் வர்த்தக மாநாடுகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த முயற்சி நடப்பு ஆண்டிலேயே தொடங்கப்பட்டுள்ளதுடன், முதலாவது SIBS@ASEAN மாநாடு இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் சிலாங்கூரில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், சர்வதேச முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு ஈர்க்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றியபோது அமிருடின் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு சிலாங்கூர் முதலீட்டு நிறுவனமான Invest Selangor மூலம் SCOUT Talent Expo மற்றும் SCOUT Skills Enhancement Programme ஆகிய இரு திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

SIBS மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படும் இத்திட்டங்கள், பட்டதாரிகள், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் திறன் பொருத்தமின்மை மற்றும் வேலைவாய்ப்புச் சவால்களுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

முதலீடுகளை ஈர்ப்பதுடன் மாநில அரசாங்கத்தின் பணி முடிவடைவதில்லை எனக் குறிப்பிட்ட அமிருடின், தொழில் தொடங்க ஆர்வமுள்ள நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திறமையான உள்ளூர் மனிதவளத்தை உருவாக்குவதும் அவசியம் என்றார்.

கடந்த மாதம் SIBS 2026 மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற SCOUT Talent Expo 2026 நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாடு, வேலை தேடுவோரையும் வேலை வழங்கும் நிறுவனங்களையும் இணைத்தல் மற்றும் எதிர்காலத் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப திறமையான பணியாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சி வேலை தேடுவோருக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதுடன், உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தகுதிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் வழிவகுத்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.