
ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை தற்போதைய 40 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்த்த அடுத்தாண்டு RM24 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இந்த நிதி, ரயில் நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து மையங்களை மக்களின் வீடுகள், பணியிடங்களுடன் இணைக்கும் முதல் மைல் (First Mile) மற்றும் கடைசி மைல் (Last Mile) போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் சிலாங்கூரில், பொதுமக்கள் எளிதாகவும் வசதியாகவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது முக்கியப் பொறுப்பாகும் என அமிருடின் கூறினார்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்றாலும், அதற்குத் துணையாக மாநில அரசும் தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார் அவர்.
இதற்கிடையில், இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ், மாநிலத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளை கிள்ளான் பள்ளத்தாக்குடன் இணைக்கும் புதிய சிலாங்கூர் ரயில் வழித்தடத்தை உருவாக்குவதற்கான திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொதுப் போக்குவரத்து வலையமைப்புகளை மக்கள் எளிதாகச் சென்றடைவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதிலும் மாநில அரசு கவனம் செலுத்துகிறது என அமிருடின் குறிப்பிட்டார்.
அதன் ஒரு பகுதியாக, நடைப்பயணிகளுக்கு ஏற்ற நகரங்களை (Walkable Cities) உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக, ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்தும் 500 மீட்டர் சுற்றளவுக்குள் மக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நடந்து செல்லும் வகையில் கூரையுடன் கூடிய நடைபாதைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.







