
ஷா ஆலாம், நவ.13: 2027-ஆம் ஆண்டில் RM500 பில்லியனுக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் (KDNK) பதிவு செய்யும் நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர் உருவெடுக்கும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் சிலாங்கூரின் பொருளாதார மதிப்பு RM489 பில்லியனை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் அது அரை டிரில்லியன் ரிங்கிட்டைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் RM432.1 பில்லியனாக இருந்த சிலாங்கூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025-ஆம் ஆண்டில் RM460.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 26.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
தற்போதைய வளர்ச்சிப் போக்கு தொடர்ந்தால், 2027-ஆம் ஆண்டில் RM500 பில்லியன் பொருளாதார மதிப்பை எட்டும் முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழும் என்றார் அமிருடின்.
சிலாங்கூர் மாநிலத்தின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலாவது சிலாங்கூர் திட்டம் (Rancangan Selangor Pertama – RS-1) முக்கியப் பங்காற்றியுள்ளதாக அமிருடின் விளக்கினார்.
2021-ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்ட இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் மாநிலப் பொருளாதாரம் 33.94 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. இத்திட்டம் தொடங்குவதற்கு முன்னர் RM343.5 பில்லியனாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025-ஆம் ஆண்டில் RM460.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
தற்போது இரண்டாவது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நீண்டகாலத் திட்டமிடல்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்றார்.
கடந்த பத்தாண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட கொள்கைத் திட்டமிடல்கள் மற்றும் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்தின் பொருளாதார நிலைத்தன்மைக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.







