
ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிர்வாகச் செலவினங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மொத்தம் RM3.3 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மாநிலச் சட்டமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது இதனை அறிவித்தார்.
மொத்த ஒதுக்கீட்டில் RM1.9 பில்லியன் (57.6 விழுக்காடு) நிர்வாகச் செலவினங்களுக்கும், எஞ்சிய RM1.4 பில்லியன் (42.4 விழுக்காடு) மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், 2027-ஆம் ஆண்டில் பல்வேறு வருவாய் வழிகள் மூலம் RM2.85 பில்லியன் வருவாய் திரட்ட முடியும் என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.
இதில் நிலப்பட்டா பிரீமியம் மூலம் RM1.112 பில்லியன் (39 விழுக்காடு), நில வரி மூலம் RM653.82 மில்லியன் (23 விழுக்காடு) மற்றும் மத்திய அரசின் மானியங்கள், நிதி உதவிகள் மூலம் RM292.70 மில்லியன் (10 விழுக்காடு) வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'முற்போக்கான மாநிலம், மதிக்கப்படும் நிறுவனங்கள், அரவணைக்கப்படும் மக்கள்' (Negeri Progresif, Institusi Dijunjung, Rakyat Disantuni) என்ற கருப்பொருளில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மாநிலத்தின் நிர்வாக மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களுக்காக RM3.23 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2027-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு RM3.3 பில்லியனாக அதிகரித்துள்ளது.
2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவை:
1) பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள மாநிலத்தின் திறனை மேம்படுத்துவதுடன், உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துப்படும்
2) மக்களின் நல்வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் வலுப்படுத்தப்படும்
3) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்தி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்
4) வாழ்நாள் முழுவதும் கல்வி கற்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்தி, அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
5) பொதுமக்களுக்கான அரசு சேவைகளை மேம்படுத்தி, மக்களின் தேவைகளுக்கு விரைவாகவும் திறம்படவும் பதிலளிக்கும் நிர்வாகக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்







