
ஷா ஆலாம், நவ.13: அரசியல் பின்னணி மற்றும் சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து மக்களின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலத்தின் மிதவாத மற்றும் முற்போக்கான ஆட்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதியளித்துள்ளார்.
மாநில அரசின் அனைத்து உதவித் திட்டங்களும் தரவுகள் மற்றும் உண்மையான தகவல்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை நியாயமான முறையில் உருவாக்குவதே முக்கிய நோக்கம் என்றார்.
இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மக்களே அரசாங்கத்தின் மிக முக்கியமான பங்குதாரர்கள் எனக் குறிப்பிட்ட அமிருடின், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்பாகும் என்றார்.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும்போது, அவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, குறைந்த சம்பளம் மக்களின் முக்கியப் பிரச்சனையாக இருந்தால், திறன் மேம்பாடு, உற்பத்தித்திறன் அதிகரிப்பு மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அதேபோன்று, வீடமைப்புப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும்போது வீடுகளின் விலை, போதுமான வீடுகளின் விநியோகம் மற்றும் அவற்றின் அமைவிடங்கள் ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் பிரதிநிதிகள் தங்களது விருப்பத்திற்கேற்ப செயல்படுவதற்கான முழுமையான அதிகாரத்தைக் கொண்டவர்கள் அல்லர் எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் வழங்கியுள்ள நம்பிக்கையையும் பொறுப்பையும் உணர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்றார்.
இதனிடையே, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்த பன்முகத்தன்மை மிக்க மாநிலமாக சிலாங்கூர் தொடர்ந்து திகழ்வது குறித்து தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.







