வாகன ஜன்னலுக்கு வெளியே பூனையைக் கயிற்றால் கட்டித் தொங்கவிட்ட சம்பவம்; சந்தேக நபரைத் தேடும் போலீஸ்

13 நவம்பர் 2026, 6:28 AM
வாகன ஜன்னலுக்கு வெளியே பூனையைக் கயிற்றால் கட்டித் தொங்கவிட்ட சம்பவம்; சந்தேக நபரைத் தேடும் போலீஸ்

குளுவாங், நவ.13: ஜோகூர், குளுவாங் பகுதியில் வாகனத்தின் ஜன்னலுக்கு வெளியே பூனை ஒன்றை கழுத்தில் கயிற்றால் கட்டித் தொங்கவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குளுவாங், ஜாலான் மெர்சிங் சாலையில் உள்ள ஜாலான் பத்து 2 பகுதியில் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில், 'This Is Johor' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஏழு விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டு பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் போலீசாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், நான்கு சக்கர வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் பூனையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, அதனை வாகனத்தின் ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டதாகத் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோஹ் தெரிவித்தார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 428-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், விலங்குகள் நலச் சட்டம் 2015இன் 29(1)(e) பிரிவு மற்றும் தகவல் தொடர்புச் சட்டத்தின் 233ஆவது பிரிவின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பஹ்ரின் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 07-7784222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.