ஷா ஆலாம், நவ.13 – சிலாங்கூர் மாநிலத்தின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தேர்தலை முன்னிட்டு மக்களைக் கவரும் வகையில் அறிவிக்கப்படும் சலுகைத் திட்டமல்ல. மாறாக ஒவ்வொரு திட்டமும் நிதி ஒதுக்கீடும் மக்களுக்குப் பயனளிப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் ஒவ்வொரு முடிவும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், அதற்காக மக்களின் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக்கான கடப்பாட்டில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப்படாது என உறுதியளித்தார்.

தேர்தல் காலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் புதிய உதவித் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து அறிவித்து நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1), இரண்டாவது சிலாங்கூர் திட்டம் (RS-2), பொருளாதார ஊக்குவிப்புத் தொகுப்புகள் மற்றும் ஆண்டு வரவு செலவுத் திட்டம் என மாநில அரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவது இயல்பானது என அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் அரசியல் ஆதாயத்தைத் தேடுவதல்ல, மாறாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுமே என அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டத்தை முன்னிட்டு, அண்மையில் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்று (நவம்பர் 13) தாக்கல் செய்யப்படவுள்ள 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மாநில அரசு ஊழியர்களுக்குச் சாதகமான அறிவிப்பு இடம்பெறக்கூடும் என்றும் அமிருடின் சூசகமாகத் தெரிவித்தார்.
புவிசார் அரசியல் சவால்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
இதனிடையே, சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டம் தயாரிப்பில் உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையின் சவால்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார்.
குறிப்பாக, இணையப் பாதுகாப்பு (Cybersecurity) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கருத்தில் கொண்டு மாநிலத்தின் எதிர்காலத் திட்டங்கள் வகுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து வெகு தொலைவில் நடைபெறும் சர்வதேச நெருக்கடிகள்கூட நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் மறைமுகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இத்தகைய நிச்சயமற்ற சூழ்நிலைகளை மக்கள் சமாளித்து, பொருளாதார ரீதியாகவும் வாழ்க்கை ரீதியாகவும் தாக்குப்பிடிக்கும் வகையில் சில கூடுதல் ஆதரவுத் திட்டங்களை வழங்கவுள்ளோம் என்றார் அவர்.

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, திறன்மிக்க மனிதவள மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகியவையும் சிலாங்கூர் 2027 வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பான பங்குதாரர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி, பொருளாதாரச் சவால்கள் மற்றும் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான நீண்டகாலத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








