சிலாங்கூரில் 2027 ஜூன் மாதத்திற்குள் புதிய நகர்ப்புற வறுமை வகைப்பாட்டு முறை அறிமுகம்

12 நவம்பர் 2026, 3:20 AM
சிலாங்கூரில் 2027 ஜூன் மாதத்திற்குள் புதிய நகர்ப்புற வறுமை வகைப்பாட்டு முறை அறிமுகம்

ஷா ஆலாம், நவ. 12 – நகர்ப்புற மக்களின் உண்மையான வாழ்க்கைச் செலவினம் மற்றும் பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, புதிய வறுமை மதிப்பீட்டு முறையை 2027-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட தற்போதைய மதிப்பீட்டு முறைக்குப் பதிலாக, மக்கள் வசிக்கும் இடம், வாழ்க்கைச் செலவு மற்றும் அவர்களின் உண்மையான பொருளாதாரத் தேவைகளையும் உள்ளடக்கிய புதிய அணுகுமுறை அறிமுகப்படுத்தப்படும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்தப் புதிய முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதவாக்கில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் நகர்ப்புற வறுமையைத் துல்லியமாக அடையாளம் கண்டு, தேவைக்கேற்ப உதவித் திட்டங்களை வகுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

இதற்கிடையில், நடுத்தர வருமானம் பெறும் M40 பிரிவினரும் மாநில அரசின் நலத்திட்டங்கள் மூலம் தொடர்ந்து பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கல்வி உதவிகள், மலிவு விலைப் பொருள் விற்பனைத் திட்டமான JER, Rumah Selangorku வீடமைப்புத் திட்டம் மற்றும் SADE நீர் உதவித் திட்டம் உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவுகளில் அடங்கும்.

மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் BINGKAS திட்டத்தின் செயல்திறனையும் மாநில அரசு மறுஆய்வு செய்யவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனரா என்பதைத் தரவுகளின் அடிப்படையில் மதிப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமிருடின் கூறினார்.

அத்துடன், சிறுவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கூடுதல் நிதி ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய உதவித் திட்டங்களை உருவாக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டில் BINGKAS Tambahan (BINGKASAN) மற்றும் BINGKAS PLUS உள்ளிட்ட கூடுதல் உதவித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

2027-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக மீடியா சிலாங்கூர் நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அமிருடின் இதனைத் தெரிவித்தார்.

மக்களின் உண்மையான வாழ்க்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு உதவிகளை வழங்குவதுடன், வறுமைச் சுழற்சியிலிருந்து குடும்பங்கள் மீள்வதற்கான நீண்டகாலத் தீர்வுகளை உருவாக்குவதே மாநில அரசின் முக்கிய நோக்கமாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.