ஷா ஆலாம், நவ.12: 2027-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படவுள்ள ஒவ்வொரு நிதி ஒதுக்கீடும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மாநிலத்தின் நிதி ஆற்றல், பொருளாதார நிலைமை மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டே நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று தமது தலைமையில் நடைபெற்ற 2027-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்ட மசோதா விளக்கக் கூட்டம் மற்றும் முன் மன்றக் கூட்டத்தில் இவ்விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திசைக்கு ஏற்ப வரவுசெலவுத் திட்டத்தின் உத்திபூர்வ அம்சங்கள் அமைவதை உறுதிப்படுத்துவதுடன், மாநிலத்தின் நிதி வளங்களையும் மக்களின் உண்மையான தேவைகளையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.
மேலும், ஒதுக்கப்படும் ஒவ்வொரு நிதியும் பொறுப்புடனும் விவேகத்துடனும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதுடன், அவை முறையான செயலாக்கத்தின் மூலம் மக்களுக்கு நேரடியான மற்றும் கண்கூடான பலன்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாகத் தமது முகநூல் பதிவில் கருத்துரைத்த அவர், 2027-ஆம் ஆண்டுக்கான மாநில வரவுசெலவுத் திட்டத்தைத் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நவம்பர் 13-ஆம் தேதி, மாநில வரவுசெலவுத் திட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், 2027-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து ஆலோசித்ததுடன், நேற்று வரையிலான சிலாங்கூர் மாநிலத்தின் நிதிச் செயல்திறன், வருவாய் வசூல் நிலவரம் மற்றும் தற்போதைய நிதி நிலைமை ஆகியவையும் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.
மாநிலத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துதல், பொதுச் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அத்துடன் மக்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் மீண்டும் உறுதியளித்தார்.







