சிலாங்கூர் பட்ஜெட் 2027: கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு கோஹிஜ்ரா கோரிக்கை

13 நவம்பர் 2026, 6:08 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2027: கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு கோஹிஜ்ரா கோரிக்கை

ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூர் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூட்டுறவுத் துறைக்கு கூடுதல் நிதி மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என சிலாங்கூர் ஹிஜ்ரா கூட்டுறவு நிறுவனம் (KoHijrah) கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், அதன் உறுப்பினர்களுக்கான வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் மாநில அரசின் கூடுதல் நிதி ஆதரவு அவசியம் என கோஹிஜ்ராவின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ டாக்டர் முகமட் ஷுக்ரி இஸ்மாயில் தெரிவித்தார்.

கோஹிஜ்ராவின் தலைமைச் செயல் அதிகாரி
டத்தோ டாக்டர் முகமட் ஷுக்ரி இஸ்மாயில்

விவசாய விளைபொருட்களைச் சேகரிக்கும் மையங்கள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகளை உருவாக்குவதன் மூலம் உணவுப் பொருள் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், கூட்டுறவு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மீடியா சிலாங்கூரிடம் பேசிய அவர், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது கோஹிஜ்ரா கூட்டுறவு நிறுவனத்தில் சுமார் 10,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழில்முனைவோராகச் செயல்பட்டு வருகின்றனர்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைத்தால், கூட்டுறவு நிறுவனம் மற்றும் அதன் உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களை மேலும் அதிகமான சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியும் என முகமட் ஷுக்ரி நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் மூலம் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் உள்ளூர் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோஹிஜ்ரா, குறு தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, உறுப்பினர்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்கி நடத்துவதற்கு உதவும் வகையில் மலிவு விலையில் உணவு டிராக்குகளை (Food Truck) வழங்குவதுடன், உணவுப் பொருட்களின் விநியோகச் சங்கிலியை மேம்படுத்தும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.