கம்போங் மெலாயு சுபாங் வெள்ளப் பிரச்சனைக்கு கூடுதல் நிதி: அன்வார் உறுதி

13 நவம்பர் 2026, 1:21 AM
கம்போங் மெலாயு சுபாங் வெள்ளப் பிரச்சனைக்கு கூடுதல் நிதி: அன்வார் உறுதி
கம்போங் மெலாயு சுபாங் வெள்ளப் பிரச்சனைக்கு கூடுதல் நிதி: அன்வார் உறுதி

ஷா ஆலாம், நவ. 13 – சிலாங்கூர், கம்போங் மெலாயு சுபாங் பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்குப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில், அங்குள்ள ஆறுகளைத் தூர்வாரும் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் இஸ்வான் காசிம் இதனைத் தெரிவித்தார்.

மேலும், வெள்ள அபாயத்தைக் குறைக்க உடனடியாகச் செயல்படுத்தக்கூடிய வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் (Quick Wins) முன்னேற்றத்தையும் அவற்றின் செயல்திறனையும் பிரதமர் ஆய்வு செய்ததாக அவர் கூறினார்.

முதற்கட்ட நடவடிக்கைகளில் பல தற்காலிக வெள்ளத் தடுப்பு மதகுகளை (Floodgates) நிறுவுதல் மற்றும் வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் ஆறுகளை அடையாளம் காணுதல் ஆகியவை இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட ஆறுகளை முதலில் தூர்வாருவதற்கும், பல இடங்களில் தற்காலிக வெள்ளத் தடுப்பு மதகுகளை அமைப்பதற்கும் கூடுதல் நிதி வழங்க அன்வார் இணக்கம் தெரிவித்துள்ளதாக இஸ்வான் கூறினார்.

நேற்று பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் அன்வார் தலைமையில் நடைபெற்ற சிலாங்கூர் வெள்ளப் பேரிடர் ஒருங்கிணைப்புக்கான சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் மீடியா சிலாங்கூர் நிறுவனத்திடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநிலச் செயலாளர் டத்தோ டாக்டர் அகமட் ஃபட்ஸ்லி அகமட் தாஜுடின், மாநில உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸாம் ஹாஷிம், ஊராட்சி மன்றங்களின் (PBT) பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS), கம்போங் மெலாயு சுபாங் பகுதியில் வெள்ளப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விளக்கமளித்துள்ளதாக இஸ்வான் தெரிவித்தார்.

எனினும், நீண்டகாலத் திட்டங்கள் முழுமையாக நிறைவடையும் வரை காத்திருக்காமல், உடனடி நடவடிக்கைகளை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, சிலாங்கூரில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த நான்கு முக்கிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தார்.

அவற்றில் வெள்ளம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், பேரிடர் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், திடீர் வெள்ளப்பெருக்கிற்கான தீர்வுகளைக் கண்டறிதல் மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) பின்பற்றும் வெள்ள மேலாண்மையின் சிறந்த நடைமுறைகளை ஆய்வு செய்தல் ஆகியவை அடங்கும்.

வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளை அடையாளம் காணுதல், அடைப்பு ஏற்பட்டுள்ள வடிகால்களை விரைந்து தூர்வாருதல் மற்றும் நீர்மட்டத்தைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.