கிள்ளான், அக். 18 – சிலாங்கூரில் புக்கிட் ராஜா, ஐ-சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு RM40 மில்லியன் நிதியை அங்கீகரித்துள்ளது.
இத்திட்டத்துக்கான வடிவமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சிறிது காலம் தேவைப்படும் என மாநில உள்கட்டமைப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

நேற்று கிள்ளானில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், வெள்ளத் தடுப்புத் திட்டத்துக்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் கூறினார்.
புக்கிட் ராஜா மற்றும் ஐ-சிட்டி பகுதிகள் அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களாக உள்ளன. இதனுடன், செக்ஷன் 7, செக்ஷன் 13 மற்றும் UiTM பல்கலைகழகத்தின் வளாகத்திற்குப் பின்புறமுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் செக்ஷன் 51, ஜாலான் 223, பிஜேஎஸ் 2, பிஜேஎஸ் 4 மற்றும் பிஜேஎஸ் 6 ஆகிய பகுதிகளின் சில இடங்கள், தாமான் மேடான், ஸ்ரீ மஞ்சா மற்றும் புவானா பெர்டானா ஆகிய பகுதிகளும் வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் வெள்ளப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவுள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அடுத்த மாதம் தாக்கல் செய்யவுள்ள மாநில வரவு செலவுத் திட்டத்தின்போது வெளியிடுவார் என்றும் இஷாம் தெரிவித்தார்.
இந்தக் கூடுதல் நிதி, நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS), பொதுப்பணித் துறை (JKR) ஆகியவற்றின் பணிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சாலைப் பராமரிப்புப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இதனிடையே, பெர்சியாரான் மொக்தார் தாஹாரியை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு தற்போது பரிசீலனையில் இருப்பதாக இஷாம் சொன்னார்.
இத்திட்டத்தின் கீழ், தற்போதுள்ள இரண்டு வழிச் சாலையை மூன்று வழிச் சாலையாக விரிவுபடுத்துவதுடன், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சந்திப்புகளையும் மேம்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், இத்திட்டத்துக்கு கணிசமான செலவு ஏற்படக்கூடும் என்பதால், அதற்கான செலவின மதிப்பீடுகள் தற்போது இறுதிசெய்யப்பட்டு வருகிறது.
மேலும், சிலாங்கூரில் உள்ள 12 ஊராட்சி பகுதிகளிலும் குறுகிய கால மற்றும் மத்திய கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நீண்டகாலத் தீர்வுகளுக்கான நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.







