வீட்டுக் காவல்: நஜீப் இணையம், சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை

12 நவம்பர் 2026, 5:04 PM
வீட்டுக் காவல்: நஜீப் இணையம், சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை

அலோர் காஜா, நவ 13: முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிக்கும் காலத்தில், வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகளை, குறிப்பாக இணையம் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அந்த நிபந்தனைகளை எந்த வகையிலும் மீறினால், நஜிப் மீண்டும் காஜாங் சிறைச்சாலையில் தனது தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.

"ஆம், (நஜிப்) தனது மனைவி,பிள்ளைகள், மருமகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் ஒன்றாக வசிக்கலாம், ஆனால் இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது.

“அதனை மீறினால், நேரடியாக மீண்டும் காஜாங் சிறைக்கு அனுப்பப்படுவார்,” என்று இங்குள்ள தாமான் பெர்தானா மலாக்காவில் , மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு கூறினார்.

முன்னதாக, மக்களவையில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பின் மூலம் மன்னிப்பு வாரியம் விதித்த நான்கு முக்கியப் பிரிவு நிபந்தனைகளுக்கு முன்னாள் பிரதமர் உட்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

வசிப்பிடம் மற்றும் பழகுவதற்கான கட்டுப்பாடுகள், நடமாட்டம் மற்றும் பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடு, தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான தடை, அத்துடன் புனர்வாழ்வு மற்றும் தலையீட்டுத் திட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஆகியவை அந்த நிபந்தனைகளில் அடங்கும்.

அத்துடன், ஊடகங்களுக்கு அறிக்கைகளோ அல்லது கருத்துகளோ வெளியிடவும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நஜிப்பிற்கு அனுமதி இல்லை.

தலைநகர், லங்காக் டூத்தாவில் உள்ள இல்லத்தில், எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க 73 வயதான நஜிப்பிற்குக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.