நஜீப்பால் 5 கோடி ரிங்கிட் அபராதத்தை செலுத்த முடியவில்லை : வழக்கறிஞர்

25 செப்டெம்பர் 2026, 4:39 AM
நஜீப்பால்  5 கோடி ரிங்கிட் அபராதத்தை செலுத்த முடியவில்லை : வழக்கறிஞர்

கோலாலம்பூர், செப் 25 - SRC வழக்கில் வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க, நிபந்தனையாக விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதத்தை டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கால் செலுத்த முடியவில்லை.

அந்த அபராதத்தை செலுத்துவதற்கான நிதி ஆற்றலை நஜீப் கொண்டிருக்கவில்லை என, அவரது வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மட் ஷாஃபி அப்துல்லா தெரிவித்தார்.

இன்று, இங்கு அந்த முன்னாள் பிரதமரை உட்படுத்திய மற்றொரு வழக்கு விசாரணைக்குப் பின்னர், முஹம்மட் ஷாஃபி செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.

நஜீப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதில், இதற்கு முன்னர் பிரதமராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பெற்று வந்த சம்பளப் பணம் சேரும் அஃப்ஃபின் வங்கி கணக்கும் அடங்குமென்றார்.

அதோடு, தமது 5 கோடி அபராதத்திற்கான பணத்தை அவர் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக கேட்கவில்லை எனவும் ஷாஃபி கூறினார்.

நன்கொடையாக இதுவரை எவ்வளவு பணம் சேர்ந்தது என்றும் அவருக்கு தெரியாது என ஷாஃபி குறிப்பிட்டார்.

இதனிடையே, பேரரசரின் நிபந்தனையுடன் கூடிய வீட்டுக் காவல் உத்தரவு தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை நஜீப்போ அவரது வழக்கறிஞர்கள் தரப்போ இன்னும் பெறவில்லை என்றாரவர்.

" அந்த நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்புத் தொடர்பில் 8 தினங்கள் ஆகியும் சிறைச்சாலை துறைக்கும் அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கவில்லை . மிகவும் தாமதமாகிறது.

வீட்டுக் காவலுக்கான முழு நிபந்தனைகள் குறித்து எதுவும் தெரியவில்லை என்பதால் , எங்களது தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அது பாதித்துள்ளது" என ஷாஃபி கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.