நீதிமன்ற உத்தரவு குறித்த குழப்பத்தால் நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

12 நவம்பர் 2026, 8:15 AM
நீதிமன்ற உத்தரவு குறித்த குழப்பத்தால் நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

ஷா ஆலாம், நவ.12 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பான நீதிமன்றத்தின் ஆரம்ப உத்தரவில் பயன்படுத்தப்பட்ட சட்டச் சொற்கள் குறித்த குழப்பமே, அந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதைத் தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திற்கு ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக, சிறைத்துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட சட்ட விவகாரங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் விளக்கினார்.

நஜிப் RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்தியதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் ஆரம்ப உத்தரவில் 'Order of Discharge' என்ற சட்டச் சொல் பயன்படுத்தப்பட்டதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

சட்ட ரீதியாக 'Discharge' மற்றும் 'Release' ஆகிய இரு சொற்களும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சைஃபுடின், குறிப்பாக நஜிப்பைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கான சிறைத்துறையின் அதிகாரம் தொடர்பில் இந்த வேறுபாடு முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார்.

நீதிமன்றம் நஜிப்பை 'Discharge' செய்திருந்தால், அவர் அபராதத்தைச் செலுத்திய பின்னர் அவரைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் சிறைத்துறைக்கு இல்லாமல் போய்விடும்.

ஆனால், நீதிமன்ற உத்தரவில் 'Release' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவரை வீட்டுக்காவலில் தொடர்ந்து வைத்திருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இதன் காரணமாக, சிறைத்துறை தலைமை ஆணையரிடம் இந்தச் சட்டச் சொற்கள் தொடர்பான குழப்பத்தை அரசாங்கத்தின் சட்ட ஆலோசகரான தலைமைச் சட்டத்துறைத் தலைவர் (Attorney General) கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறு தாம் கேட்டுக்கொண்டதாகவும் சைஃபுடின் தெரிவித்தார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர், கடந்த நவம்பர் 6-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி 'Discharge Order' உத்தரவை ரத்து செய்து, நிபந்தனையுடன் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று மக்களவையில் நடைபெற்ற வாய்மொழிக் கேள்வி நேரத்தின்போது, நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பைச் செயல்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குறித்து பெரிக்காத்தான் நேஷனல் (PN) கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் எழுப்பிய கூடுதல் கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்திற்கு உட்பட்டதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட சைஃபுடின், அதேவேளையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் அரச குடும்பத்தின் நிறுவனங்களுக்கு உரிய மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

நீதிமன்ற உத்தரவு தொடர்பான குழப்பத்தைச் சிறிய விவகாரமாகக் கருதிவிட முடியாது என்றும், தெளிவான சட்ட விளக்கத்தைப் பெறுவதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்ட நடைமுறை குறித்து பொதுமக்கள் மேலும் தெளிவான புரிதலைப் பெறும் வகையில், கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தின் (Lembaga Pengampunan Wilayah Persekutuan) கூட்டக் குறிப்புகளை ரகசிய வகைப்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்ற பரிந்துரையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.